×

கொரோனாவால் தனிமைப்படுத்திக்கொண்ட மம்தா மோகன்தாஸ் ஓவியம் வரைகிறார்

சென்னை: தமிழில் சிவப்பதிகாரம், குசேலன், குரு என் ஆளு, தடையறத் தாக்க ஆகிய படங்களில் நடித்தவர் மம்தா மோகன்தாஸ். மலையாள நடிகையான இவர் பின்னணி பாடகியும் கூட. தீவிர நோயால் பீடிக்கப்பட்டு மீண்டுள்ள இவர், சமீபத்தில் மியூசிக் ஆல்பத்தில் நடிப்பதற்காக துபாய் சென்றிருந்தார். பிறகு கேரளா திரும்பிய அவர், தனக்கு கொரோனா வைரஸ் பாதிப்புக்கான அறிகுறி இல்லாத நிலையிலும் வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார். முகக்கவசம் அணிந்த போட்டோவை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள அவர், ஓய்வு நேரத்தில் வீட்டை சுத்தப்படுத்துவது, ஓவியங்கள் வரைவது போன்ற பணியில் ஈடுபடுவதாக தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறியதாவது: சுயமாக தனிமைப்படுத்திக் கொள்ளுதல் என்பது, ஒருவர்  உடல்நலம் குன்றினால் மட்டுமே செய்யும் விஷயம் என்று நினைக்கின்றனர்.

இதனால் என்னையும்,  என்னை சேர்ந்தவர்களையும் போனில் அழைத்து, நாங்கள் நலமாக இருக்கிறோமா என்று விசாரிக்கின்றனர். சமீபத்தில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இருந்து கேரளாவுக்கு வந்ததால், என்னை நானே  தனிமைப்படுத்திக் கொண்டேன். இதுதான் விதிமுறை. உங்களுக்கு  தெரியவில்லை என்றால் இப்போது தெரிந்துகொள்ளுங்கள். உலகமே  இப்போது ஸ்தம்பித்து காணப்படுகிறது. எனவே, சினிமா மற்றும் இதர படப்பிடிப்புகள் காலவரையின்றி நிறுத்தப்பட்டுள்ளது. அடுத்து என்ன நடக்கும் என்று யாருக்கும்  தெரியாது. தேசிய ஊரடங்கு கடைப்பிடிக்கப்படும் இவ்வேளையில், இவ்வளவு நேரத்தை வைத்துக்கொண்டு என்ன செய்வது என்று யோசிக்காதீர்கள். தனிமையில் இருக்கும் நீங்கள் அதுபற்றி நினைத்து மனஅழுத்தத்துக்கு ஆளாகாதீர்கள். பீதியையும், பயத்தையும் மற்றவர்களுக்கு மெசேஜ் மூலம் பரப்பாதீர்கள்.

வீட்டிலேயே பாதுகாப்பாக இருங்கள். 20 நொடிகளாவது கைகளை நன்றாக  கழுவுங்கள். நம்மை தனிமைப்படுத்தி சுத்தமாக வைத்திருப்பதுதான் நோக்கமே தவிர வேறெதுவும் இல்லை. இந்த நேரத்தை நம் குடும்பத்துடனான பிணைப்பை வலுவாக்க பயன்படுத்துங்கள். உங்களை நீங்களே பார்த்துக்கொள்வதற்கான நேரத்தை  எடுத்துக்கொண்டு மனரீதியாகவும், ஆன்மீக சிந்தனையிலும் தூய்மைப்படுத்திக்  கொள்ளுங்கள். தற்போது நாம் பிசியாக இல்லை. நிறைய நேரம் கிடைத்துள்ளது என்று பொழுதுபோக்க வீட்டை விட்டு வெளியேறி, கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளாகாதீர்கள். வீட்டில் சும்மா இருப்பதால், மனதில் மோசமான சிந்தனைகள் உதிக்கலாம்.

அதற்காக பொறுப்பற்ற தன்மையை கடைப்பிடிக்காதீர்கள். வீட்டிலேயே பாதுகாப்பாக இருந்து, நேரத்தை எப்படி ஆக்கப்பூர்வமாக பயன்படுத்துவது என்று யோசியுங்கள். இது உங்களையும், மற்றவர்களையும் பாதுகாப்பாக இருக்கும். ஆனால், ஒட்டுமொத்த நேரத்தையும் மொபைல், வாட்ஸ்அப், சமூக வலைத்தளங்களில் செலவிடாதீர்கள். நேரத்தை ஒழுங்காக திட்டமிடுங்கள். கொரோனா என்ற அபாய கட்டத்தை தாண்டி, அனைவரும் பத்திரமாக மீண்டு வருவோம். தற்போது நான் ஓவியம் வரைய ஆரம்பித்துள்ளேன்.

Tags : Mamta Mohandas ,Corona , Corona, Mamta Mohandas, Painting
× RELATED கொரோனா ஊரடங்குதான் என்னை தொழில் முனைவோராக மாற்றியது!